LASSIJOY
''உலகிலே எங்கேனும் ஓரிடத்தில் ஏதோ ஓர் காரணத்தால் நேரிடும் ஏதோ ஓர் சம்பவம் ,உலகின் மற்ற பாகங்களை பாதிக்கும் நாட்களில் நாம் வாழ்கிறோம். உலகத் தொடர்பு அதிகரித்துவிட்ட வளர்ந்து கொண்டே போகும் நாட்களிலே நாம் வாழ்கிறோம்.
''நாட்டுநிலை ,உலகநிலைக்கு ஏற்ப வளர்ந்தாக வேண்டும். இதற்கு வீட்டு நிலை மாற வேண்டும் . வீட்டிற்கோர் புத்தக சாலை என்ற இலட்சியம் ,நாட்டுக்கோர் நல்லநிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்துக்கு அடிப்படை . மலை கண்டு ,நதி கண்டு ,மாநிதி கண்டு அல்ல ,ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்த நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே . மாநிலம் மதிக்கும் மனவளம் வேண்டும்.
''எழுத்தறிவற்றவர் ஏராளம் இந்நாட்டில் . இது பெருங்கோடு . கல்வி பெற்றவர்கள் அனைவருக்குமாவது மனவளம் இருக்கிறதோ?அவர்களின் வீடுகளாவது நாட்டுக்குச் சிறப்பளிக்கும் நற்பண்புகள் செழிக்கும் பண்ணைகளாக ,நாட்டுக்கு வலிவும் வனப்பும் தேடித்தரும் கருத்துக்கள் மலரும் சோலையாக உள்ளனவா என்றால் ,இல்லை என்று பெருமூச்சுடன் கூறித்தான் ஆகவேண்டும் . உள்ளதை மறைக்காதிருக்க வேண்டுமானால் ,நாட்டுநிலை கண்டு உலகம் மதிக்க வேண்டுமானால் ,இந்த சூழ்நிலை மாறியாக வேண்டும் .
''வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியத்தை நடைமுறைத் திட்டமாக்கி ,சற்றுச் சிரமப்பட்டால் ,நமது நாட்டிலே நிச்சயமாக மனவளத்தைப் பெற முடியும் . நமது சந்ததியார்களுக்கு இருந்ததைவிட ,அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன.
''அவர்களின் காலம் அடவியல் ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆல மரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க ,குரு காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்து ,பாடங்களைச் சொல்லித்தரும் முறை இருந்த காலம் எஏடும் எழுத்தாணியும் இருந்த காலம் . இப்போதுள்ளது உலகை நமது வீட்டுக்கு அழைத்துவந்து காட்டக்கூடிய காலம் . பாமர மக்கள் பாராளும் காலம். மனவளத்தை அதிகப்படுத்தும் மார்க்கம் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம் .
''இதோ நான் பேசுகிறேன் . நீங்கள் கேட்கிறீர்கள் . இடையே பலப்பல மைல்கள் . இந்த ஒலி கேட்பது அறிவின் துணைகொண்டு ஆக்கித் தந்த சாதனம் நமக்குச் கிடைத்திருக்கிறது . இவ்வசதி சாதனகங்கள் இல்லாதிருந்த நாட்கள் நமது முன்னோர்கள் காலம். இவ்வளவு வசதிகள் நமக்கிருக்கிறது . ஏன் ,மனவளம் இவ்வளவு குறைவாக இருக்கிறது. வீடுகளிலே மனவளத்தை அதிகரிக்கவோ பாதுக்காகவோ நாம் முயற்சி செய்வதில்லை ;வழிவகை தேடிக் கொள்வதில்லை .
''வீடுகளில் மேஜை,நாற்காலி ,சோப்பாக்கள் இருக்கும் . பீரோக்கள் இருக்கும் . அவைகளின் வெள்ளித் தாம்பாளமும் ,விதவிதமான வட்டில்களும் பன்னீர்ச்செம்பும் இருக்கும் . பித்தளைப் பாத்திரங்கள் இருக்கும் . உடைகள் சிறு கடை அளவுக்கு இருக்கும் . மருந்து வகைகள் சிறு வைத்தியச்சாலை அளவுக்கு இருக்கும் . அப்படிப்பட்ட வசதியுள்ள வீடுகளிலேயுங்கூடப் புத்தகசாலை இராது.
''வீட்டிற்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும். வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் ,அலங்காரம் பொருள்களுக்கும் போக போக்கியம் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி புத்தகசாலைக்கு அந்த இடம் தரப்பட வேண்டும் . உணவு ,உடை,அடிப்படைத் தேவை -அந்தத் தேவையை பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும்.
''வீட்டிற்கோர் புத்தகசாலை அமைக்க வேண்டும் . மக்களின் மனத்திலே உலக அறிவு புக வழிசெய்ய வேண்டும் . அவர்கள் தங்கள் நாட்டை அறிய உலகை அறிய ஏடுகள் வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள் கூட அல்ல அடிப்படை உண்மைகளாவது அறிவிக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும்.
''வீடுகளிலே நடைபெறும் விஷேசங்களின் போது வெளீயூர்கள் சென்று திரும்பும் போது ,பரிசளிப்புகள் நடத்தும் போது புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு பழக்கத்தைக் கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் சில காலத்துக்காவது ஏற்படுத்திக்கொண்டால் சுலபத்தில் ஒரு சிறு புத்தகசாலையை அமைத்து விடலாம் . உலக அறிவை ,உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்.
''பூகோள ,சரித ஏடுகள் இருக்க வேண்டும். நமக்கு உண்மை உலகை காட்ட நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட ,வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
''நமது தமிழகத்தின் தனிச்சிறப்பு என்று கூறத்கும் சங்க இலக்கியச் சாரத்தைச் சாமனியாரும் அறிந்து வாசிக்கக் கூடிய முறையில் தீட்டப்பட்ட ஏடுகள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச மக்கள் முன்னேற்றத்துக்கும் வாழ்க்கை வசதிக்கும் உதவும் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தகவல்களைத் தெரிவிக்கும் நூல்கள் இருக்க வேண்டும்.
''நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள் மக்களின் மனமாக துடைத்தவர்கள் தொலைதேசங்களைக் கண்டவர்கள் ,வீரர்கள் விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பு ஏடுகள் இருக்க வேண்டும்.
''இந்த அடிப்படையில் வீட்டிற்கோர் புத்தகசாலை தேவை . கோட்டின் நீக்கிட தக்க முறைகளைத் தரும் ஏடுகள் கொண்டதாக இருக்க வேண்டும் ,வீட்டிலே அமைக்கும் புத்தகசாலை..


0 Comments